Monday, September 5, 2011

ஐகோர்ட் திருகாணி - சிறுகதை

"இவரு பெரிய அரிச்சந்திர மகாராசா..பொய் சொல்லமாட்டாராம்,கடன் வாங்க மாட்டாராம்..இப்படி பொழைக்கத் தெரியாத மனுசனுக்கு வாக்கப்பட்டு நான் என்னத்தக் கண்டன்."

"அப்பவே சொன்னான் எங்கப்பன், அந்த பாட்டாளத்து மீசக்காரனக் கட்டிக்கோனு.. நான் தான் அவரு பேச்சக் கேட்டாகாம இப்படி வந்து மாட்டிக்கிடேன்..பேரு மட்டும் கவருமெண்டு உத்தியோகம்..இது வரைக்கும் சம்பளத்தை தவிர ஒரு கவரும் கொண்டாந்தாரா இந்த மனுசன்?"

தினமும் கேட்ட தன் மனைவி ரங்காமாவின் வார்த்தைகள் தான் என்றாலும்,,மகளின் பிறந்த நாளுக்கு ஒரு புதுத் துணி வாங்கித்தர தன் கொள்கையை சற்று மாற்ற நினைத்து,அலுவலகம் போனார்..ஐகோர்ட்டு குமாஸ்தா அரவிந்தன்.

வழக்கமான பணிகளுக்கிடையே..ஐகோர்ட்டு கான்டீனுக்கு வந்து திரும்பியவர் கண்களில் சிறிய,மொல்லிய அந்த ஓளி பாய்ந்தது..சின்னதாய் ஒரு திருகாணி அவர் கால்களுக்கிடையே!

மனதில் ஏதேதோ தோன்றி மறைய..அதைக் கையில் எடுத்துக் கொண்டு சில அடி நகர்ந்தார்..வட்டிக்கடை சேட் அவர் அருகில் வந்து.."என்ன அர்விந்து, நம்ம கிட்ட நீங்க
என்னைக்காவது ஒரு நாள் வருவீங்க.." என்றபடி ஆட்டோவை அழைத்தக் கொண்டு போனார்.

மாலை..அடகுக் கடையில் அந்த திருகாணியை வைத்து, வந்த பணத்தில் தன் மகளுக்கு புதுத்துணி வாங்கும் என்னதில்..சாலையில் போனவர் கண்களில், ஒரு பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்த ஏசு கோயில் டீச்சரும்,சில பெண் குழந்தைகளும் பட்டனர்.

"இங்க பெத்தவங்க இலந்த, நிறைய குழந்தைங்கள வெச்சு நாங்க காப்பாத்தறோம்,,அவங்க தங்கி படிக்க,வசதி பத்தலை..புதுசா கட்டம் ஒண்ணு கட்றோம்..உங்களால முடிஞ்ச உதவியச் செய்யுங்க" என்றார் அந்த டீச்சர்.

அவரை நோக்கி உண்டியலை நீட்டிய அந்தச் சிறுமி, தன் மகளின் வயதவளாய் தெரிந்தால்
அரவிந்தனுக்கு.

"ஐகோர்ட்டுல கிடைச்ச இந்த திருகாணி,அங்க விவாகரத்து வாங்க வந்த அம்மா கையப் புடிச்சிட்டு அழுதுட்டே போன ஒரு பெண் குழந்தையோடதா இருக்கலாம், வாங்காத லஞ்ச வழக்குல கோர்ட்டு தீர்ப்புக்குவர தன் புருசன பார்க்க வந்த மனைவியோடதா இருக்கலாம்."

"கதியில்லாத,,கவணமில்லதா முகம் தெரியாதங்க பொருளை அடகுவெச்சு வந்த பணத்துக்கு எனக்கு என்ன உரிமையிருக்கு.."

இப்படி பல எண்ணகள் மனதில் நிறைய..சிறுமி நீட்டிய உண்டியலில் அந்த பணத்தைப்
போட்டுவிட்டு,தன் மகளுக்குத் துணி வாங்க,சேட்டின் வட்டிக்கடை நோக்கி சைக்கிள் மிதித்தார் குமாஸ்தா அரவிந்தன்.

பின் குறிப்பு: பிரிட்டிஷ் காலத்தில், சென்னை ஐகோர்ட்டு வலாகத்தின் தரைகளில் அவர்கள் ஒரு சில வடிவங்களை வரைந்து வைத்திருந்தனர். அதைப் பார்த்து அதன் அடிப்படையில் நகை ஆசாரிகள் பிரத்தியேகமாக வடிவமைத்த திருகாணிகள் "ஐகோர்ட் திருகாணி" என்ற பெயரில் அப்போது பிரபலமாக விற்பனையாது. செய்திக்கு நன்றி:-ஆனந்த விகடன் வார இதழ்.

No comments:

Post a Comment